JoomlaLock.com All4Share.net

Background Video

இன்று உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. இணையம் வாயிலான கருத்துப் பரிமாற்றங்களால் விநாடிக்குள் உலகின் எந்தப் பகுதியையும் தொடர்பு கொள்ள முடிகிறது. அதிவேகமான உலகம், திறமையுள்ள மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.

இத்தகைய போட்டி மிகுந்த உலகில் இன்றைய இளைஞர்கள் வெல்ல வேண்டுமானால், வழக்கமான தொழில் சார்ந்த படிப்புகள் மட்டுமல்லாது, சில பிரத்யேகத் திறன்களையும் பெற்றிருப்பது அவசியமாகிறது.

தகவல் தொடர்புத் திறன் (இர்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் நந்ண்ப்ப்ள்) மிகுந்தவர்கள் எந்தத் துறையிலும் கோலோச்ச முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு அடிப்படையாக பிறமொழி அறிவு உள்ளது. எனவே தாய்மொழி, உலகப் பொதுமொழியான ஆங்கிலம் தவிர்த்து பிற உலக மொழிகள் சிலவற்றையும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகியுள்ளது.

முதலாவதாக மாணவர்கள் ஒவ்வொருவரும் தனது தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பது இன்றியமையாததாகும். சொந்த மொழியை அலட்சியம் செய்பவர்களால் பிற மொழிகளில் சாதனை படைத்துவிட முடியாது.

பிற மொழிகளில் நீங்கள் திறன் படைத்திருந்தாலும் உங்கள் வேர்கள் நிலைகொண்டுள்ள தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் பற்றிய புரிதலும் பெருமிதமும் இருப்பது அவசியம். அது நீங்கள் பிற மொழிகளில் நடத்தும் கருத்துப் பரிமாற்றங்களில் வெளிப்படும்போது உங்களுக்கு தனி மரியாதை கிட்டும்.

தாய்மொழியைத் தொடர்ந்து, தேசிய மொழியாக உள்ள ஹிந்தியிலும் மாணவர்கள் திறன் படைத்திருப்பது நல்லது. படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்புக்காக நாடு முழுவதும் செல்லும்போது, அங்குள்ள மக்களுடன் விரைவாகப் பழகவும், உரையாடவும் ஹிந்தி மொழி அறிவு அத்தியாவசியம்.

நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி புழங்கினாலும், ஹிந்தியும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் சரளமாக உரையாடவும் எளிதாக மக்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

அடுத்ததாக, உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்திலும் படித்தல், எழுதுதல், பேசுதல் ஆகிய மூன்று திறன்களையும் மாணவர்கள் பெற்றிருப்பது முக்கியம்.

பிழையின்றி சரளமாக எழுதுதல், சரியான உச்சரிப்பு, இயல்பாக திணறலின்றி உரையாடும் திறன் ஆகியவையே மொழி ஆளுமையாகக் கருதப்படுகின்றன. ஆங்கில நூல் வாசிப்பு உங்கள் ஆங்கில ஆளுமையை மேம்படுத்தும்.

தாய்மொழி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுடன், வேறு ஏதாவது ஒரு உலக மொழியிலும் மாணவர்கள் பாண்டித்தியம் பெறுவது சிறப்பான தகுதியாகக் கருதப்படுகிறது.

வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டால் அந்த மொழி பேசும் நாட்டிற்குச்  சென்றுதான் பணிபுரிய வேண்டும் என்றில்லை. இந்தியா தற்போது உலக நாடுகள் அனைத்தும் வந்துசெல்லும் நாடாக மாறிவிட்டது. எனவே உள்நாட்டிலுள்ள பிறநாட்டு நிறுவனங்களின கிளைகளிலேயே நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் பரவலான பிறகு, எந்த நாடும் பிற நாடுகளில் தொழில் துவங்குவது எளிதாகியுள்ளது. ஸ்வராஜ் பால், மிட்டல் போன்ற இந்தியத் தொழிலதிபர்களே பல வெளிநாடுகளில் பெருந்தொழில்களை நடத்தும் காலம் இது. அத்தகைய நிறுவனங்களுக்கு பல மொழிகளில் ஆளுமை வாய்ந்த நிபுணர்கள் தேவைப் படுகிறார்கள்.

குறிப்பாக, சீனம், ஜெர்மன், பிரெஞ்ச், ரஷியன், லத்தீன், ஜப்பானிஸ், கொரியன், அரபு மொழிகளைக் கற்றவர்களுக்கு பிற நாடுகளிலும் நம் நாட்டிலும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இந்த மொழிகளைப் படிப்பவர்களுக்கு, மொழிபெயர்ப்பாளர், விளக்க உரையாளர், மொழி ஆசிரியர், மொழியியல் வல்லுநர், தகவல் தொடர்பாளர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் உள்ளன. 

வெளிநாட்டு மொழிகளில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு, சுற்றுலாத் துறை, பொழுதுபோக்கு துறை, மக்கள் தொடர்புத் துறை, தூதரகங்கள், பதிப்புத் துறை போன்றவற்றில் பலவிதமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

உலகமொழிகளை படிப்புகளாக வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை சில உதாரணங்கள் மட்டுமே. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிறமொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகள் தேடிவரும்.

சீனம்

தில்லி பல்கலைக்கழகம்: எம்.ஃபில்.

கொல்கத்தா பல்கலைக்கழகம்: டிப்ளமோ

சைனிஸ் லேங்குவேஜ் இன்ஸ்டிட்யூட்: டிப்ளமோ

பிரெஞ்ச்

தில்லி பல்கலைக்கழகம்: பி.ஏ.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: சான்றிதழ்

அலையான்ஸ் பிரான்சிஸ்: டிப்ளமோ, சான்றிதழ்

பெரியார் பல்லைக்கழகம்: சான்றிதழ்

ஜெர்மன்

கொல்கத்தா பல்கலைக்கழகம்: டிப்ளமோ

தில்லி பல்கலைக்கழகம்: சான்றிதழ்

லத்தீன்

இத்தாலியன் கல்சுரல் இன்ஸ்டிட்யூட்: டிப்ளமோ, சான்றிதழ்

சென்னை பல்கலைக்கழகம்: சான்றிதழ்

தில்லி பல்கலைக்கழகம்: டிப்ளமோ, எம்.ஏ, எம்.ஃபில், பி.எச்டி.

ஜப்பானிஸ்

தில்லி பல்கலைக்கழகம்: டிப்ளமோ, எம்.ஃபில்

அமெரிக்கன் கல்லூரி, மதுரை: சான்றிதழ்

சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்: சான்றிதழ்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், தில்லி: சான்றிதழ்

ஸ்பானிஷ்

சென்னை பல்கலைக்கழகம்: டிப்ளமோ, சான்றிதழ்

தில்லி பல்கலைக்கழகம்: டிப்ளமோ

அரபு மொழி

சென்னை பல்கலைக்கழகம்: எம்.ஏ, எம்.ஃபில், சான்றிதழ், டிப்ளமோ.

தில்லி பல்கலைக்கழகம்: பி.ஏ.

கோழிக்கோடு (காலிகட்) பல்கலைக்கழகம்: பி.ஏ.

 எந்த மொழியைக் கற்றாலும், மொழி அறிவுக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும்  மட்டும் கற்காமல், அந்த மொழியிலுள்ள இலக்கிய வளத்தைச் சுவைக்கும் தன்மை கொண்டவர்களாகவும் மாணவர்கள் இருந்தால் அவர்களது அறிவு மேம்படும்.

 தமிழகம் வரும் வெளிநாட்டவர் ஒருவர் திருக்குறளில் தனது ஆர்வத்தையும் திறனையும் தமிழில் வெளிப்படுத்தினால் தமிழக மக்கள் இயல்பாகவே அவரால் கவரப்படுவர். அதேபோலத் தான், ஷேக்ஸ்பியரை நன்கு அறிந்த இந்தியரால் பிரிட்டனில் வெகு எளிதாக செயலாற்ற முடியும். தவிர, பிற நாட்டு இலக்கிய அறிவு நமது அறிவை விசாலமாக்குவதுடன், நம்மைப் பண்படுத்துவதாகவும் அமைகிறது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…