மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு... குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
மருத்துவ பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்வதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி கடந்த 1-ம் தேதி நடந்த நுழைவுத்தேர்வை சுமார் 6½ லட்சம் மாணவர்கள் எழுதினர். ஜூலை 24-ம் தேதி 2-வது கட்ட நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.இந்நிலையில், பொது நுழைவுத்தேர்வு கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுடன் அவர்கள் போட்டிபோட முடியாது என்பதால் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. மேலும், இந்த ஆண்டு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதை தொடர்ந்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்த ஆண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்திவரும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. அந்த அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அவர், உடனே ஒப்புதல் அளிக்காமல் இதுதொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டதுடன், இந்த அவசர சட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் கேட்டிருந்தார். இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது ஜே.பி.நட்டா மாநில வாரியான கல்வித்திட்டங்கள் உள்பட பல்வேறு விளக்கங்களை அளித்தார்.இதை தொடர்ந்து, தற்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கிடைத்துள்ளது.