JoomlaLock.com All4Share.net

Background Video

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களை மைனாரிட்டியாக மாற்ற இந்தியா முயற்சி செய்து வருவதாக ஐ.நா.,வில் பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு செயலர் சர்தாஜ் அஜீஸ் கடிதம் எழுதியுள்ளதாக அந்நாட்டு பத்திரிகைள் வெளியிட்டுள்ள செய்தியில் காஷ்மீரில் மக்கள் தொகையை மாற்றியமைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அங்கு பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள் தொகையை மைனாரிட்டியாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

காஷ்மீரில் வசிக்காத மக்களுக்கு அங்கு நிரந்த குடியிருப்பு சான்று வழங்குகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சார்ந்தவர் அல்லாதவர்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கப்படுகிறது. காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளுக்கு தனி நகரம் அமைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Published in உலகம்

கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம்.

கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி தவறுதலாகவும் தனது காதலியை சுட்டுவிட்டதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கியிருந்த வேளையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தோக்கோஜிலி மசிபா, புனர்வாழ்வு மற்றும் குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகிய தணிமைப்படுத்தும் சூழல்கள், கொலை குற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து மாறி குறைந்த தண்டனை வழங்கக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

Published in உலகம்

அமெரிக்க சுதந்திர தினத்தன்று தான், அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் மூத்தமகள் மாலியாவிற்கும் பிறந்தநாள். எனவே, வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் நாட்டிற்கும், தன் மகளுக்கும் ஒபாமா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடந்த 1776ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அமெரிக்கா விடுதலை பெற்றது. எனவே ஆண்டுதோறும் ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, அமெரிக்கா சுதந்திர நாடாக பிறந்ததை நினைவு கூறும் வகையில் மைக்கில், 'ஹேப்பி பர்த்டே' பாடலைப் பாடினார் ஒபாமா.

பின்னர் தனது மூத்த மகள் மாலியாவை தனதருகில் அழைத்த ஒபாமா, மீண்டும் ஒருமுறை ஹேப்பி பர்த்டே பாடலைப் பாடினார். காரணம் அன்றைய தினம் மாலியாவின் பிறந்தநாள் ஆகும்.

இதனால், மாலியாவின் பிறந்தநாள் அரசு விழா போல் காட்சியளித்தது. ஒபாமா வாழ்த்துப் பாடல் பாடியதும், அவரது அன்பில் நெகிழ்ந்து அவரது தோளில் சாய்ந்து கொண்டு சிரித்தார் மாலியா.

Published in உலகம்

சீனாவில் பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகளை காப்பாற்ற முடியாமல் அதன் உரிமையாளர் கண்ணீருடன் விடைபெற்று செல்ல முடிவு செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷுசெங் மாகாணத்தில் பருவமழை தொடங்கி கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலத்த சேதம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பெய்லின் நகரில் அமைந்துள்ள பன்றி வளர்ப்பு கொட்டகையில் உள்ள 6000 பன்றிகள் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தவண்ணம் உள்ளது. கொட்டகை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பன்றிகள் அந்த தண்ணீரில் சிக்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பன்றிகளை மீட்டு வேறு பகுதிக்கு மாற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் சென்று முடிந்துள்ள நிலையில், அதன் காப்பாளர் எடுத்த முடிவு வருத்தமளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த கொட்டகையில் இருந்து சில எண்ணிக்கையிலான பன்றிகளையும் தொழிலாளர்களையும் அருகாமையில் உள்ள நிறுவனத்தார் மீட்டு பத்திரமாக வேறு பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் எஞ்சிய பன்றிகளை மீட்பது முடியாத நிலை என கூறப்படுகிறது. சில பன்றிகள் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார் அந்த கொட்டகையில் காப்பாளர். இருந்தும் மொத்த பன்றிகளையும் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பன்றி கொட்டகையை பன்றிகளுடன் விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்துக்கொள்ள விவசாயி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் மற்றும் மத்திய சீனா பகுதிகளில் பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளத்திற்கு கடந்த 3 நாட்களில் மட்டும் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் மாயமாகியுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். பெருமழையால் மட்டும் இப்பகுதியில் 20 பில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published in உலகம்

இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.

சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.

அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.

இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.

அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.

காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

 

ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார்.

தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார்.

பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர்.

அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன.

1876ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார்.

திடீரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது.

வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார், பெல்லின் கனவு நனவானது.

பிறகு ஒரு மாத்திற்குள் இரண்டு எளிமையான டெலிபோன்களையும், ஒரு மைக்ரோபோனையும் கண்டுபிடித்தார்.

பின்னர் 1876ம் ஆண்டு பெல் தனது புதிய கண்டுபிடிப்புக்கு உரிமை வாங்க பதிவு அலுவலகத்திற்கு சென்றார்.

 

அதற்கு சற்று முன்னால் எலிசா கிரே என்பவர் எலக்ட்ரிகல் ஸ்பீச் மெஷின்-க்கு உரிமை வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.

10 வருடங்கள் கழித்து டெலிபோனை கண்டுபிடித்தது யார் என்று நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் பெல் வெற்றி பெற்று பெரும் செல்வந்தர் ஆனார்.

தொலைபேசி மட்டுமின்றி அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தார்.

பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை, ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார், விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார்.

பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதையும் காது கேளாத குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கே அர்ப்பணித்தார்.

இவர் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார், இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ம் திகதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார்.

அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

உலகையே சிறு கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லையே சாரும் என்று கூறினால் அது மிகையல்ல!...

 

 

 

பக்கம் 1 / 21
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…