JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் நேற்று நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர்கள் 5 பேர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால் அவர்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடியை தொடர்ந்து தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட 4 பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இன்றும் (அக்.,18) கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கேரள பஸ்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி ராஜ் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றார். அவர் பம்பையை கடந்த நிலையில், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 13,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 12,000 கனஅடியில் இருந்து 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,042 கனஅடியில் இருந்து 23,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 103.37 அடியாகவும், நீர்இருப்பு 69.27 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்த டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018 00:00

திமுக கூட்டணியில் விஜயகாந்த் !!!

தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை திமுக துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விஜயகாந்த்தை கூல் செய்யும் வேலையில், திமுக 2ம் கட்ட தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

ஓய்வுபெறும் வயதில் அரசியலுக்கு வர நினைக்கும் ரஜினி,கமலை விட விஜயகாந்த் மேலானாவர் என்று கூறியுள்ளார் திமுக சட்டசபை உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர்.

அம்பத்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட அம்பத்தூர் வடக்கு பகுதி சார்பாக 'மக்கள் நலன் மறந்து ஊழல் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுகூட்டம்' என்ற பெயரில், நடைப்பெற்றது.

ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலார் பி.கே.சேகர் பாபு, நடிகரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் ஆன வாகை சந்திரசேகர், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறன் நடக்காத 2ஜி ஊழலை நடந்ததாக கூறி, மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்தன ஊடகங்கள் என்று கூறினார்.

பின்னர் பேசிய வாகை சந்திர சேகர், ஓய்வுபெறும் வயதில் அரசியலுக்கு வர நினைக்கும் ரஜினி,கமலை விட விஜயகாந்த் மேலானாவர் என்றும் கருணாநிதி மீது நல்ல மதிப்பை வைத்து இருந்தவர் விஜயகாந்த் என்றும் கூறினார். வீழ்வது நாமாக இருந்தாலும் ,வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கருணாநிதி வசனத்தை பேசியவர் விஜகாந்த் என்றும் கூறினார்.

ரஜினி,கமல்,விஜய் போன்றோர் பொதுவாழ்க்கையில் மக்களுக்காக என்ன செய்தீர்கள்? உடனே திராவிட கட்சிகளை ஒழிக்க போவதாகவும், புது மாற்றத்தை கொண்டு வரபோவதாக கூறி என்ன செய்ய போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார் வாகை சந்திரசேகர். திமுக எம்எல்ஏ மட்டுமல்லாது, அக்கட்சி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பை நீண்டகாலமாக பராமரித்து வருபவர் வாகை சந்திரசேகர்.

எனவே வாகை சந்திரசேகரின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணியை பெற அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார். காத்திருந்தார். பழம் கனிந்துவிட்டது, பாலில் விழ காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். ஆனால், வைகோ உள்ளிட்டோர் உருவாக்கிய அணியுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். இந்த அணிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி, திமுகவும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்து, பிடிக்க முடியாமல், மீண்டும் அதிமுகவிடம் கோட்டைவிட வேண்டியதாயிற்று.

இந்த நிலையில்தான், இம்முறையாவது தேமுதிகவை, திமுக தனது கூட்டணிக்கு ஈர்க்க முயல்கிறதோ என்ற ஐயத்தை, வாகை சந்திரசேகர் பேச்சு எழுப்பியுள்ளது. சமீபகாலமாக திமுகவை விமர்சனம் செய்வதை விஜயகாந்த் நிறுத்திவிட்டார். கருணாநிதி மறைவையடுத்து கண்ணீர் விட்டு விஜயகாந்த் கதறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், விஜயகாந்த்தை தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியை திமுக துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி மதில் மேல் பூனையாக உள்ளது. எனவே அதற்கு அடுத்ததாக மாநிலம் முழுக்க பரந்து விரிந்த தேமுதிகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள திமுக விரும்புவதாக தெரிகிறது. விஜயகாந்த்துக்குமே இதுதான் இப்போது பெஸ்ட் ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது. எனவே கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் கனிந்த பழம், வரும் லோக்சபா தேர்தல் நேரத்தில் பாலில் விழும் என்று கட்டியம் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, ஐப்பசி மாத வழிபாட்டுக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

அத்துடன் 10 வயதுக்கு மேலிருந்து 50 வயதுக்குள் உள்ள பெண்கள் சபரிமலை சந்நிதானத்துக்கு செல்வதை தடுக்க வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்த, பதிலுக்கு பக்தர்களும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியிருந்தார். மேலும், சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. போராட்டங்கள் வலுத்த நிலையில், கேரள அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. இதனிடையே, தேவசம் போர்டின் சமரச முடிவிற்கு கேரள இந்து அறநிலையத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எவ்வித பிரச்னையும் இன்றி ஐயப்பனை வணங்கி செல்ல வேண்டும் என அவர் கூறினார்.

வியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018 00:00

திரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'

கேரம் போர்டு பிளேயர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கேங்ஸ்டர் ஆக உருவெடுத்தால் அதுவே 'வடசென்னை' என்று சொல்லலாம். ஆனால், அது மட்டும்தான் படத்தின் ஒன்லைன் என்றால் இல்லவே இல்லை.  Image result for vada chennai film images posters stills photos

வடசென்னைப் பகுதியில் கடலை ஒட்டி பிழைப்பு நடத்தும் மக்களை அரசியலும் அதிகாரமும் வெளியேற்றப் பார்க்கிறது. அதற்கு ராஜன் (அமீர்) எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் காரியம் சாதிக்க நினைக்கும் அரசியல்வாதி முத்து (ராதாரவி) ராஜனுடன் இருக்கும் நண்பன் செந்திலை (கிஷோர்) தூண்டி விடுகிறார். எம்.ஜி.ஆர். இறந்த அன்று கடலில் படகு மூலம் சாராயம் கடத்துகிறார் செந்தில். இதனால் செந்தில் (கிஷோர்), குணா (சமுத்திரக்கனி), வேலு (பவன்), பழனி (தீனா) உள்ளிட்டோரும் போலீஸிடம் சிக்க, கோபத்தில் அவர்கள் நால்வரையும் அடித்து விடுகிறார் ராஜன். அன்றிரவே சமயம் பார்த்து ராஜன் அந்த நால்வரால் படுகொலை செய்யப்படுகிறார். அந்த சூழலில் பக்கத்தில் இருந்தும் அண்ணனைக் காப்பாற்ற முடியாமல் அழ மட்டுமே செய்கிறார் ராஜனின் தம்பி (டேனியல் பாலாஜி). 

நால்வரில் சமுத்திரக்கனியும், பவனும் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதாகி சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். கிஷோரும், தீனாவும் அவர்களை ஜாமீனில் எடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். அந்த இடைவெளியில் பெரிய ரவுடிகளாக வலம் வருகின்றனர். ஜாமீனில் வெளிவரும் சமுத்திரக்கனியும், பவனும் கிஷோருக்கு எதிரிகள் ஆகின்றனர். இந்நிலையில் அன்பு (தனுஷ்) ஒரு பிரச்சினையில் சிறைக்கைதியாகச் சென்று கிஷோரைப் போட்டுத்தள்ள முயற்சிக்கிறார். அது கொஞ்சம் சொதப்பலில் முடிகிறது. யார் இந்த அன்பு, ராஜனுக்கும் சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட நால்வருக்கும் உள்ள பிரச்சினை என்ன, ராஜனின் அன்பு மனைவி சந்திரா என்ன ஆகிறார், அண்ணனைக் கொன்றவர்களை டேனியல் பாலாஜி என்ன செய்கிறார், அன்பு ஏன் ராஜனாக உருமாறுகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.  Image result for vada chennai film images posters stills photos

தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு கேங்ஸ்டர் சினிமாவைக் கொடுத்த விதத்தில் வெற்றிமாறன் ஆச்சரியப்படுத்துகிறார். கதாபாத்திரத் தேர்வு, அவர்களுக்கான விவரணைகள், தோரணை, காட்சி அமைப்புகள் போன்றவற்றில் அவரது உழைப்பு பளிச்சிடுகிறது. 

படத்தில் நாயகன் இவர்தான் என்று உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்து கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதுவே படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.  

அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் மிகையில்லா நடிப்பைத் தந்திருக்கிறார். புதுப்பேட்டைக்கு முன், பின் என தனுஷின் நடிப்பைப் பற்றி விமர்சிக்கலாம். அதுபோல இனி வடசென்னைக்கு முன், பின் என்று தனுஷ் நடிப்பு மெருகேறி உள்ளதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். காதலில் கிறங்குவது, வசவு வார்த்தை வீசிய ஐஸ்வர்யா ராஜேஷைப் பின் தொடர்ந்து காதலிப்பது, காதலிக்கு முத்தம் கொடுத்ததைக் கலாய்த்த தீனாவைச் சாய்ப்பது, கிஷோரின் ரவுடிக் கூட்டத்தில் இடம்பெறுவது, கேரம் போர்டு விளையாடி நம்பிக்கைக்குரிய ஆளாக மாறுவது என தனுஷ் பிரமாதப்படுத்தி இருக்கிறார். தொழில்முறை நடிகனாக தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.  

ஆண்ட்ரியாவுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம். அதை அவ்வளவு அழகாகச் செய்திருக்கிறார். சேலைத் தலைப்பை இழுத்து செருகுவது போல் துரோகத்தின் நிழலையும், வன்மத்தின் மௌனத்தையும் இறுக்கமான நடிப்பால் வெளிப்படுத்துகிறார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு வசவு வார்த்தை வீசிய தென்றலாக வருகிறார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் வடசென்னைப் பெண்ணாகவே மாறி ரசிக்க வைக்கிறார். தனுஷ்- ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் காட்சிகள் படத்தின் ரசனை அத்தியாயங்கள்.  

சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், பவன், பாவல் நவகீதன், ராதாரவி, தீனா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணிய சிவா ஆகியோர் உறுதுணைக் கதாபாத்திரங்களாக நின்று படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திர வார்ப்பும் கூடுதல் கவனம் பெறுகிறது.  Image result for vada chennai film images posters stills photos

வேல்ராஜின் கேமரா வடசென்னையின் சந்துபொந்துகளை, இண்டு இடுக்குகளை, சிறைச்சாலையில் நடக்கும் அட்டூழியங்களை அப்படியே துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் படத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்கிறார். படம் முழுக்க நிறைய கதாபாத்திரங்கள், அவர்களுக்கான அறிமுகப் படலங்கள், சண்டை செய்வதற்காக காரண காரியங்கள் இருந்தாலும் அவற்றை அலுப்பூட்டாமல், குழப்பம் ஏற்படுத்தாமல் பார்க்க வைக்கும் விதத்தில் வெங்கடேஷின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம்.  

ஒரு முத்தம் கொடுத்தது ஏன் இவ்வளவு பெரிய ஆபத்தில் தனுஷைக் கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் முக்கியமான முடிச்சு. காதலுக்கான கருவி எப்படி கொலைக்கான முகாந்திரமாக மாறுகிறது என்பதையும், அன்புவாக இருக்கும் தனுஷ் ஒவ்வொரு படிநிலையாய் ஏறி ராஜனாம மாறும் விதத்தையும் எந்தப் பூச்சும் இல்லாமல் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். கேங்ஸ்டர் படம் என்பதற்காக அறிமுகக் காட்சி என்ற ஒன்றை தனுஷுக்கு வைக்காத அவர் கதைக்கான நேர்மையை மட்டும் திரைக்கதையாக செதுக்கிய விதத்தில் மிகப்பெரிய ஆளுமை என்பதை நிறுவி இருக்கிறார். சிறைக்காட்சிகளில் இருக்கும் டீட்டெய்லிங் அசர வைக்கிறது. தனுஷ் அமீர் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள அங்கு தங்குவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருப்பது கச்சிதம். 

குறைகள் என்று சொல்லப்போனால் டேனியல் பாலாஜி ஏன் அண்ணன் சொன்ன வார்த்தைக்காக, அந்த நால்வரையும் அப்படியே விட்டுவிடுகிறான். அதுவும் ஒருகட்டத்தில் சுய சமாதானம் செய்துகொள்கிறான் என்பது தெரியவில்லை. சமுத்திரக்கனி, கிஷோர் கதாபாத்திரங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு தேக்க நிலையை அடைந்து விடுகின்றன. ஆனால், இவற்றை பெரிதாக பொருட்படுத்தவும் தேவையில்லாத அளவுக்கு திரைக்கதையால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.  

விசுவாசத்துக்கும் துரோகத்துக்குமான வேறுபாட்டையும் சமரசமில்லாமல் பதிவு செய்த 'வடசென்னை' நிலம் குறித்த அரசியலையும், அதிகாரத்தையும் தகர்த்தெறிய உரிமைக்குரல் எழுப்பிய விதத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கிறது.

பக்கம் 4 / 2220
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…