JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து தமது அரசியல் பிரவேசத்தைத் தொடங்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ந் தேதி தமது கட்சியின் பெயரை அறிவிக்கிறார். பின்னர் தமது அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில் கமல்ஹாசன் திராவிட அரசியலின் நீட்சியாக தமது கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் தாம் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசியல் பயணத்தை துவங்குவேன் என கமல்ஹாசன் கூறியிருந்தார். தற்போது ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்ல்து கலாமின் இல்லத்தில் இருந்து தமது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் பிறரது மனது புண்படாத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் பற்றியும், அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றியும் கோரிக்கை விடுத்தார்.

இதன்பிறகு, நிருபர்களிடம் பேட்டியளித்த பன்னீர்செல்வத்திடம், ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து, பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த, பன்னீர்செல்வம், அது தப்புதான். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் பிறரது மனது புண்படாத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து 'தனி நபர் இல்லை' என்றும், எங்களை ஆயுதம் ஏந்த தூண்டாதீர்கள் என்றும் கூறிய நிலையில், பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2004-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

விருதுக்குரிய காலக்கட்டமாக 2016-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு இறுதி வரை வீரர்களின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்படி கடந்த ஆண்டின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான போட்டியில் இருந்த டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (இருவரும் இங்கிலாந்து) ஆகியோரை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான கேர்பீல்டு சோபர்ஸ் கோப்பையை பெறுகிறார்.

விருதுக்குரிய காலக் கட்டத்தில் விராட்கோலி டெஸ்ட் போட்டியில் 6 இரட்டை சதங்கள் உள்பட 2,203 ரன்னும் (சராசரி 77.80), ஒருநாள் போட்டியில் 7 சதம் உள்பட 1,818 ரன்னும் (சராசரி 82.63), 20 ஓவர் போட்டியில் 299 ரன்னும் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுவதற்கும் அவரது பங்களிப்பு மகத்தானதாக அமைந்தது.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதையும் விராட் கோலி தட்டிச் சென்றார். இதற்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருந்த ஹசன் அலி (பாகிஸ்தான்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோரை ஓரங்கட்டிய கோலி, இந்த விருதை 2-வது முறையாக பெறுகிறார்.

சிறந்த டெஸ்ட் வீரர் சுமித்


சிறந்த டெஸ்ட் வீரர் விருது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் வசம் ஆகியுள்ளது. அவர் 16 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 சதம், 5 அரைசதம் உள்பட 1,875 ரன்கள் (சராசரி 78.12) திரட்டி இருக்கிறார். ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் 947 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன், ஒட்டுமொத்தத்தில் அதிக புள்ளிகள் குவித்த வீரர்களில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு (961 புள்ளிகள்) அடுத்த இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கான பட்டியலில் அஸ்வின், புஜாரா, விராட்கோலி (மூவரும் இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்களை, ஸ்டீவன் சுமித் எளிதில் முந்தி விட்டார்.

யுஸ்வேந்திர சாஹல்

சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் அள்ளியதன் மூலம் யுஸ்வேந்திர சாஹல் இந்த விருதுக்குரியவர் ஆகியிருக்கிறார்.

அசோசியேட் அணிகளுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ரஷித் கானும் (ஆப்கானிஸ்தான்), வளரும் சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக ஹசன் அலியும் (பாகிஸ்தான்), சிறந்த நடுவராக மரைஸ் எராஸ்மஸ்சும் (தென்ஆப்பிரிக்கா) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி.யின் கனவு அணிகளும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. டெஸ்ட் அணியில் விராட்கோலி, புஜாரா, அஸ்வின், ஒருநாள் அணியில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இரண்டு கனவு அணிக்கும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பாகும். கடந்த ஆண்டில் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்த இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட இவ்விரு கனவு அணிகளிலும் இடம் பிடிக்கவில்லை.

கனவு அணிகள்

ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன், இந்தியா), டீன் எல்கர் (தென்ஆப்பிரிக்கா) டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), புஜாரா (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர், தென்ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ரபடா (தென்ஆப்பிரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).

ஒரு நாள் போட்டி கனவு அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன், இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரோகித் சர்மா (இந்தியா), பாபர் அசாம் (பாகிஸ்தான்), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர், தென் ஆப்பிரிக்கா) பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஹசன் அலி (பாகிஸ்தான்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறித்து 29 வயதான இந்திய கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘அனேகமாக உலக கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட் வீரர்கள் பெறும் மிகப்பெரிய விருது இது தான். இந்த விருதை இரண்டு இந்தியர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெறுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். கடந்த ஆண்டில் அஸ்வின் சிறந்த வீரராக தேர்வு ஆனார். இந்த தடவை அந்த விருதை நான் முதல்முறையாக பெற உள்ளேன். உண்மையிலேயே இது எனக்கு மிகப்பெரிய கவுரவமாகும். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் அணிக்காக கடினமாக உழைக்கிறார்கள். அதை இந்த வகையில் அங்கீகரிக்கும் ஐ.சி.சி.க்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை நான் ஏற்கனவே 2012-ம் ஆண்டு பெற்று இருக்கிறேன்.’ என்றார்.

விராட் கோலியை தவிர்த்து டிராவிட் (2004-ம் ஆண்டு), சச்சின் தெண்டுல்கர் (2010-ம் ஆண்டு), அஸ்வின் (2016-ம் ஆண்டு) ஆகிய இந்திய வீரர்களும் ஆண்டின் சிறந்த வீரர் விருதை பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. 

பின்னர் சென்சாரின் தலையீட்டுக்கு பின்னர் படம் பத்மாவத் என்ற பெயர் மாற்றத்துடன் வருகிற 25ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால் படத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. இதனால் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இப்படத்திற்கு தடை விதித்தன. 

இதை எதிர்த்து, தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி படம் ஜன., 25-ம் தேதி ரிலீஸாகிறது.

 கஜகஸ்தானில் பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 52 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் சமரா நகரிலிருந்து கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 55 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 2 பேர் இருந்தனர். பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர்கள். 

அப்போது பஸ்சில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 52 பேர் பஸ்சுக்குள் தீயில் கருகி உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பக்கம் 10 / 1837
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…