JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரை கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், ''தெலுங்கானா முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள கடல் பகுதியில், திடீர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. 

இதனால், அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கன மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை இல்லாத பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 4 செ.மீ., மழையும், பெருஞ்சாணி மற்றும் நாமக்கல்லில் 3 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.'' என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், வாட்டி வதைக்கும் வெப்பத்திலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவின் அழகிய இமயமலை மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் ஏறக்குறைய 300 யாக் எருதுகள் பட்டினியால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான பனிப்பொழிவின் விளைவால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 டிசம்பர் மாதம் முதலே, முகுதாங்க் மற்றும் யும்தாங் ஆகிய பிராந்தியங்களில் நிலவிய கடுமையான பனிப்பொழிவின் விளைவால், சுமார் 300 யாக் எருதுகள் வரை இறந்துள்ளதாக வடக்கு சிக்கிம் மாவட்ட நீதிபதி ராஜ் யாதவ் உறுதிபடுத்தியுள்ளார்.

முகுதாங் பிராந்தியத்தில் 250 யாக் எருதுகளின் பிணங்களும், யும்தாங் பிராந்தியத்தில் 50 யாக் எருதுகளின் பிணங்களும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாதவ் கூறியுள்ளார்.

நீண்டகாலம் நீடித்த அதீத பனிப்பொழிவால், உண்பதற்கு உணவு எதுவும் கிடைக்காமல் போனதே, இறப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019 00:00

கொடைக்கானலில் களைகட்டும் சீசன்

கொடைக்கானலில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் சீசன் களை கட்டியது.
இங்குள்ள சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, மோயர் பாயிண்ட், சிறுவர் பூங்கா, பாம்பார் அருவி, பியர் சோழா அருவி, கோக்கர்ஸ்வாக், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

இங்கு அவ்வப்போது லேசான சாரலும், மேகமூட்டமும் நிலவியதால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: கொடைக்கானலில் ஒரு சில நாள்கள் தங்கி சுற்றுலா இடங்களையும் மேல்மலைப் பகுதிகளிலுள்ள கூக்கால் ஏரி, மன்னவனூர் ஏரி, ஆட்டுப் பண்ணை, பூம்பாறையிலுள்ள குழந்தை வேலப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களைப் பார்க்க தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் கொடைக்கானல் பகுதியில் பல்வேறு பிரச்னைகளால் 300-க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் பூட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள தனியார் காட்டேஜ்களில் கூடுதலாக கட்டண வசூல் செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

மேலும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சிலர் தாங்கள் வந்த வாகனங்களிலும், ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள கடைகளிலும் தங்கிச் செல்கின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் பூட்டப்பட்ட காட்டேஜ்களும் அனுமதியில்லாமல் இயங்குவதோடு அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருவதால் ஏரிச்சாலை, செவண்ரோடு, கோக்கர்ஸ்வாக் சாலை, லாஸ்காட் சாலை, அப்பர்லேக் வியூ சாலை, அப்சர்வேட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனர். கொடைக்கானலில் இயற்கை எழிலை மறைத்தும், மலைச்சாலைகளிலும் தற்போது கடைகள் அமைத்து வருகின்றனர்.

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் ஏரிச்சாலை முதல் பெருமாள் மலை வரையிலும் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019 00:00

ஐபிஎல் 2019 : மும்பை அணி சாம்பியன்

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில்  டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ரன்னைத் தொட்டது.

டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ரன்களாக இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், இஷான் கிஷன் 23 ரன்னிலும், குருணால் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.  3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ரன்களே எடுத்தது.

6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை.

கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.  பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் 

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது.  வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ரன்களும் ராயுடு 1 ரன்களிலும் டோனி 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ரன்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி.

சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது.  
 
கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 3-வது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது சர்துல் தாகூர் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது சர்துல் தாகூர் அவுட் ஆனார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

இன்று நடைபெற்ற 6வது கட்ட மக்களவை தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு மேற்குவங்கத்தில் நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அம்மாநிலத்தில் அதிகபட்சமாக 80.16% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் 54.24% என குறைந்தபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இன்று தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் அடங்கிய மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவிகிதங்களை தற்போது பார்ப்போம்
 
டெல்லி- 58.01%
 
பிஹார்- 59.29%
 
மத்திய பிரதேசம் - 62.06%
 
உத்தர பிரதேசம்- 54.24%
 
ஹரியானா- 65.48%
 
மேற்கு வங்கம்- 80.16%
 
ஜார்க்கண்ட்- 64.50%
 
இன்னும் ஒரே கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ளது. மே 19ஆம் தேதி 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன் மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 

 

பக்கம் 11 / 2470
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…