JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அந்த பணம் என்ன ஆனது என கேட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு 50க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், மேலும் 14 மாவட்ட செயலாளர்கள் தற்போது விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கட்சி தொடங்கியது முதல் இதுவரையில் நடந்த முக்கிய சம்பவங்களை குறிப்பிட்டு பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியதாவது:

''உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் நாங்கள் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும், யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேமுதிக பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தேமுதிக இருக்கிறது.

2005-இல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தேமுதிக என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேமுதிக மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணத்தை கொடுக்கவில்லை.

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த தி.மு.க. வை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு திமுகவை எதிர்த்தோம்.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக திமுகவையும், அ.தி.மு.க வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-இல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக திமுகவோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தே.மு.தி.க டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்க்ள என்று கேட்டு இருக்கிறீர்களா?.

தே.மு.தி.க கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது.

உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக எடுத்த முடிவின் விளைவு 10.5 சதவீதமாக இருந்த வாக்கு 2.5 சதவீதமாகி போனது. தி.மு.க வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தேமுதிகவில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ரேண்டம் எண்ணை பல்கலை துணைவேந்தர் மணியன் வெளியிட்டார். தரவரிசைப்பட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும் எனவும், கலந்தாய்வு முதல் வாரத்தில் துவங்கும் எனவும் துணைவேந்தர் கூறினார்.

யோகா பயிற்சி நிலையங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் தரச் சான்றிதழ் அளிக்க மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், அப்பயிற்சி நிலையங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும். இச்சான்றிதழை பெற இந்திய தரக் கட்டுப்பாடு அமைப்பின் இணைதளத்தின் மூலம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பின் தரச்சான்றிதழ் அளிக்கப்படவுள்ளது.

கேள்வி: மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்வதால் தான் தொடர்ந்து மக்கள் என்னை இரண்டாவது முறையாக முதல்வராக்கியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: ஜெயலலிதா எந்தச் சக்தியை மூலதனமாகக் கொண்டு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்று ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய் என்பதை மக்களே உணர்வார்கள். மக்கள் சக்திதான் மூலதனம் என்றால், 98 இடங்களில் அதிமுக தோற்றிருக்கிறதே, அங்கெல்லாம் மக்கள் சக்தி அவர்கள் பக்கம் இல்லை என்பது உண்மை தானே?

கேள்வி: அதிமுக அரசில் தொடங்கப்படும் திட்டங்களுக்கெல்லாம் “அம்மா” பெயரை வைப்பது பற்றி?

கருணாநிதி: இன்றைய முதல்வர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தமிழகச் சட்டப் பேரவையில் 11.01.2010 அன்று பேசும்போது, “ஒரு முதல்வரின் பெயர் ஒரு திட்டத்திற்கு சூட்டப்படுவது முறையற்ற செயலாகும்” என்று குறிப்பிட்டார். ஒரு திட்டத்திற்கு சூட்டப்படுவது தானே முறையற்ற செயல் என்பதற்காகத்தான் தற்போது அம்மா 5 ரூபாய் மதிய உணவு, அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், 'அம்மா' உணவகம், 'அம்மா' குடிநீர், ' 'அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள், அம்மா விதைகள், அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம் (அம்மா பேபிகேர் கிட்) என்று பல திட்டங்களுக்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள் போலும்!

கேள்வி: ஆளுநர் உரை மீதான விவாதத் திற்கு பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது என்று பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: முதல்வர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, 26 ஆயிரம் ரூபாய் கொள்ளை; ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாய், 3 மகள்கள் கொடூரக் கொலை; சென்னை நுங்கம்பாக்கம், புகைவண்டி நிலையத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை; கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை; அம்பத் தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என்று 9 கொலைகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கலில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகையில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக அந்தக் கோவில் செயல் அலுவலரை அ.தி.மு.க. வினர் தாக்கி அவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். 24.06.2016 தேதிய “தினமலர்” நாளேட்டில் “கொலையாய் நடக்கிறது; பயமாய் இருக்கிறது - நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கும் கூலிப்படைகள் - நடுக்கத்தோடு வாழும் வட சென்னை மக்கள்” என்ற தலைப்பில் அரை பக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பற்றித்தான் எழுதியுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா?

 

தமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், 23ம் தேதி துவங்கியது. முதல் நாளில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 500 இடங்களில், 352 இடங்கள் மட்டுமே நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கான, 5,000 இடங்களுக்கு, 221 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. காலை, 7:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தினமும் கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை, 23, 24ல், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அழைப்பு கடிதங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் அதைப் பார்த்து, 2 மணி நேரத்திற்கு முன்னதாக பல்கலை வளாகத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…